செந்தமிழ்சிற்பிகள்

அறிஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) (1909 – 1969)

அறிஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) (1909 – 1969)

 

அறிமுகம்

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார்  மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர் ,அண்ணா மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர்,

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 

தமிழின் சுவை என்னது எனப் பாமரருக்கு அறிமுகப்படுத்தியவர்.கொட்டும் அருவி போல் குளிர்ந்த தன் அடுக்கு சொல் ஆற்றலால் தமிழ் மக்களின் இதயங்களைக் கட்டி ஆண்டவர்.தமிழ் இவர் நாவில் குடியிருந்ததால் தமிழகமே வெளிச்சம் பெற்றது எனக்கூறத் தகுதியானவர்.பெரியாரின் சீடர், சமுக மாறுதலை தன் எழுத்தின் மூலம் இழுத்துச் சென்றவர்.எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.

தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.